பழிவாங்கும் கொலைகள் அதிகம் நடக்கும் இடங்களின் பட்டியலில் பெங்களூரு முதல் இடத்திலும், டெல்லி இரண்டாம் இடத்திலும் உள்ளது என்று என்.சி.ஆர்.பி அறிக்கை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில்தான் நாட்டில் அதிகளவில் பழிவாங்கும் கொலைகள் பதிவாகியுள்ளன. 2019ஆம் ஆண்டில் 106 பழிவாங்கும் கொலைகளுடன் பெங்களூரு முதல் இடத்திலும், 87 பழிவாங்கும் கொலைகளுடன் டெல்லி இரண்டாம் இடத்திலும் உள்ளது என்று தேசிய குற்றப் பதிவுகள் ஆணையம் (என்.சி.ஆர்.பி) தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 210 கொலைகள் 2019 ல் பெங்களூருவிலிருந்து பதிவாகியுள்ளன. 505 கொலைகளுடன் டெல்லி கொலைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மொத்த கொலைகளில் சுமார் 75 சதவீத கொலைகள் தனிப்பட்ட பகை அல்லது பழிதீர்க்கும் விதமாக செய்யப்பட்டவை.
தனிப்பட்ட பகை தொடர்பாக பெரும்பாலான கொலைகள் நிலம், பெண் மற்றும் சொத்திற்காக நடந்தன. "தனிப்பட்ட பகையின் காரணமான கொலைகள் பெரும்பாலும் குடும்பங்களில், நண்பர்கள் மற்றும் ஒரே வட்டாரத்தில் வாழும் நபர்களிடையே நடைபெறுகின்றன. தனிப்பட்ட ஆதாயத்துக்கான கொலைகளில் குற்றத்திற்கான நோக்கம் தங்கம், பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களைப் கொள்ளையடிப்பதே ஆகும் என்றும் என்.சி.ஆர்.பி தெரிவித்துள்ளது.