கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் ஜீவன் பீமாநகர் பகுதியில் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளர் ஒருவருக்கும், அதே வீட்டில் வாடகைக்கு இருந்தவர் குடும்பத்திற்கும் இடையே கடந்த 6 மாதகாலமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. வாடகைக்கு இருந்தவர்கள், வீட்டில் நாயை வளர்த்துள்ளனர். ஆனால், வீட்டின் உரிமையாளரோ, நாய் வளர்க்கக்கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதற்கிடையே, நாய் வளர்ப்பு தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீஸ் ஸ்டேஷன் வரை புகாரும் சென்றுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த 2ம் தேதி வாடகைக்கு இருப்பவர்களது வீட்டுக்கு வந்த உரிமையாளர், 4 பேருடன் வந்து நாய்க்காக வைக்கப்பட்டிருந்த கேட்டை எடுத்துவிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வீட்டில் இருந்து வந்த இளம்பெண், கேட்டை பிடுங்க முற்பட்டபோது அவரை கூட்டாக சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதற்கு அந்த பெண் பதில் தாக்குதல் நடத்துவதும், இருதரப்பும் ஆவேசமாக அடித்துக்கொள்வதும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது சம்மந்தமாக இரு தரப்பாலும் காவல் நிலையத்தில் புதிதாக புகார் அளிக்கவில்லை எனினும், நாயை வளர்த்தால் வீட்டை காலி செய்யுங்கள் என்று வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.