நடிகர் கார்த்தி நடித்த தீரன் திரைப்படத்தின் தாக்கமாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை மற்றும் வீடு கொள்ளை வழக்கில் 15 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லாதது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக எம்.எல்.ஏவும், முன்னாள் அமைச்சருமான கே.சுதர்சனம் வீட்டுக்குள் நுழைந்த வட நாட்டு கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி, அவரை கொலை செய்தனர். அவரது குடும்பத்தினரை தாக்கி படுகாயமடையச் செய்து, 63 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். ஹரியானாவைச் சேர்ந்த பவாரியா கொள்ளைக் கும்பல், 2005 ம் ஆண்டு நடத்திய இந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக, பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொலையாளிகளை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த போலீசார், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பவாரியா மற்றும் அவரது சகோதரர் ஜெகதீஸ்வரா உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் ஓம்பிரகாஷ் பவாரியா சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டார். அவரது சகோதரர் ஜெகதீஷ் பரா 2005 ஆம் ஆண்டிலிருந்து விசாரணை கைதியாக புழல் சிறையில் இருந்து வருகிறார் .
இந்த நிலையில் ஜெகதீஷ்பரா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீனில் விடுவிக்க கோரி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 15 ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் இருந்தது குறித்து நீதிபதி அதிர்ச்சி தெரிவித்தார். 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்கள் ஏன் இன்னும் கைது செய்யவில்லை? ஏன் இவ்வளவு தாமதம் என்று காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, விசாரணை அதிகாரியான பெரியபாளையம் காவல் ஆய்வாளர் ஜனவரி 18ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
நடிகர் கார்த்தி நடித்து வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படம், இந்த சம்பவத்தின் அடிப்படையில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.