செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் தனியார் பள்ளியில் தாளாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2016ம் ஆண்டு கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். சதீஷ்குமார் தற்போது தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு கடந்த 2023ம் ஆண்டு தெரியவந்துள்ளது. பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2023ம் ஆண்டு, மார்ச் மாதம், 26ம் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
அதையடுத்து அடுத்த மூன்று மாதத்தில் இந்த திருமணத்தில் விருப்பமில்லை என சதீஷ்குமார் கூறியதாகவும், இது குறித்து அந்தப் பெண் சதீஷ்குமார் வீட்டிற்குச் சென்று கேட்டபோது, தான் வேலை செய்யும் வங்கியில் தன்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை தான் திருமணம் செய்யப் போவதாகவும் கூறிய சதீஷ்குமார், அந்தப் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக இருவரும் காதலித்தபோது, தனிமையில் இருந்ததை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் போட்டோ வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி 20 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தினர், தாம்பரம் மாநகர காவல் ஆணையராக அலுவலகத்தில் புகார் அளித்ததின் பேரில் பல்லாவரம் போலீசார் சம்பவம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.