அம்பத்தூரில் 210 சவரன் போலி நகைகளை அடகு வைத்து வங்கியை ஏமாற்றிய மூவர் 4 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அம்பத்தூர் - அய்யப்பாக்கம் நெடுஞ்சாலை, கே.கே.நகரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2018-ஆம் ஆண்டு அம்பத்தூர், டி.ஜி.அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த தமீம்அன்சாரி (33) என்பவர், தனது 3 நண்பர்களுடன் வந்து சிறுக சிறுக சுமார் 210 சவரன் தங்க நகைகளை அடமானம் வைத்து ரூ.32 லட்சம் பணம் பெற்றுள்ளார்.
இதற்கிடையில் 2019-ஆம் ஆண்டு வங்கியில் உள்ள நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்துள்ளனர். அப்போது தமீம்அன்சாரி மற்றும் அவரது நண்பர்கள் அடமானம் வைத்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசிய போலி நகைகள் என்பதை அறிந்து வங்கி நிர்வாகிகள் அதிர்ந்து போயுள்ளனர். இதனையடுத்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி மேலாளர் சீனிவாசன் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தமீம்அன்சாரி உள்ளிட்ட 4 பேரை தனிப்படை அமைத்து தேடிவந்தனர். ஆனால் அவர்கள் 4 பேரும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த தமீம்அன்சாரி மற்றும் அவரது நண்பர்களான பாடி, கலைவாணர் நகரைச் சேர்ந்த முகம்மது கபீர் (39), முகம்மது சித்திக் (34) ஆகிய மூவரை 4 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்தனர்.
எனினும் மோசடி கும்பல் அனைத்து பணத்தையும் செலவழித்துள்ளதால் பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு இளைஞரை காவல்துறையின் தீவிரமாக தேடி வருகின்றனர்.