பாஜக கல்யாணராமன் குண்டுகட்டாக நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டதன் பின்னணி என்ன? முழு விவரம்

பாஜக கல்யாணராமன் குண்டுகட்டாக நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டதன் பின்னணி என்ன? முழு விவரம்
பாஜக கல்யாணராமன் குண்டுகட்டாக நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டதன் பின்னணி என்ன? முழு விவரம்
Published on

நீதிமன்ற பிரமாணப் பத்திரத்தை மீறி இரு மதத்தினருக்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக, பாஜக பிரமுகர் கல்யாணராமனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். 2 மாதங்களில் அவர் பதிவிட்ட 18 ட்விட்கள் மத பிரச்னை தூண்டப்படும் விதமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது சமூக வலைதள பக்கத்தை முடக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகர் கல்யாணராமன் இதற்கு முன்னரும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது சமூக வலைதளத்தின் மூலம் பதிவிட்டு வந்தவர் என்பதால் அவர் மீது பல்வேறு வழக்குகள் இப்போதும் நிலுவையில் உள்ளன. அந்தவகையில் கடந்த ஜனவரி 2021 கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்திலும் இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவதூறு பேசி பொதுமக்கள் அமைதியை குலைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் பிப்ரவரி மாதம் 2021 -ல் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த குண்டர் சட்டம் ரத்தானது. அதன் பிறகு ஜாமின் மனு தாக்கல் செய்யும் போது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கருத்து பதிவிட மாட்டேன் என நீதிமன்றத்தில் பிணைப்பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார்.

அதனடிப்படையில் பிணையில் வெளியே வந்த பிறகும் அரசியல் தலைவர்களையும், அவர்கள் குடும்பத்தை பற்றி அவதூறாக கருத்து பதிவிடுதல் மற்றும் பிரமாண பத்திரத்தை மீறி இரு மதத்தினருக்கு இடையே பிரச்னை ஏற்படுத்தும் வகையில் சமூக வளைதளத்தில் தொடர்ந்து கருத்து பதிவிட்டு வந்துள்ளார் அவர். அதை குறிப்பிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் கோபிநாத் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். முன்னதாக கடந்த ஜூலை மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டதன் அடிப்படையில் அதன் பொதுச் செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார்களின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்து 153(1)(ஏ)- சாதி, மத, இனம், மொழி, சமயம் தொடர்பாக விரோத உணர்ச்சியை தூண்டிவிடுதல், 505(2)-பொதுமக்களிடையே தவறான தகவலை பரப்பி தீங்கு இளைத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் முக்கிய தலைவர்களையும் அரசியல் பிரமுகர்கள் பற்றி அவதூறு பரப்புதல், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் அவதூறாக பேசும் வகையில் கருத்துகளை பதிவிடுதல் ஆகிய  காரணங்களுக்காக, சென்னை சிட்லப்பாக்கத்தில் ஒரு வழக்கும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் 2017, 2018 இல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்வதற்கு முன்பு வரை தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பல பேர் பற்றிய தவறான கருத்துகளை பதிவிட்டு வந்ததால் கல்யாணராமன் மீது கண்டனங்களும் எழுந்தன. 

நேற்று இரவு வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கல்யாணராமனை அதிரடியாக போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொள்ள தனிப்படை செல்லும் போது, பாஜக பிரமுகர் கல்யாணராமன் அவரது நண்பர்கள் மது போதையில் தகராறில் ஈடுபட்டதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். ‘பாஜகவை சேர்ந்த உங்களை போன்றவர்கள் மதுகுடித்துவிட்டு அநாகரிகமாக நடந்து கொள்ளலாமா?’ என காவல்துறையினர் கல்யாணரமனிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர் போலீசாரை அவதூறாக பேசியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

மேலும் கல்யாணராமன் தரப்பில், ‘7 வருட தண்டனைக்கு குறைவாக உள்ள சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் 41 a கிரிமினல் நோட்டீஸ் கொடுத்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ எனக் கோரி, கைதுக்கு ஒத்துழைக்காமல் வீட்டினுள் சென்று அவர் கதவை பூட்டி கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் தரப்பில், ‘7 வருட தண்டனை குறைவாக சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தாலும் முறையாக விசாரணைக்கு ஒத்துழைக்காத போது கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற அடிப்படையிலேயே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக முயற்சித்தால் பாஜக பிரமுகர் கல்யாணராமனை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து அழைத்து சென்றுள்ளனர் என சொல்லப்படுகிறது.

இதனால் கல்யாணராமன் அணிந்திருந்த ஆடைகள் கிழிந்த நிலையில் காரில் ஏற்றி செல்லப்பட்டார். அப்படி அவரை போலீசார் அழைத்து சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் பலர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளு, முள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட கல்யாணராமனை சைபர் கிரைம் போலீசார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து இரவு முழுக்க விசாரணை நடத்தினர். விசாரணையில் கல்யாணராமன கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக 18 ட்விட்களை பதிவிட்டது தெரியவந்தது. இந்நிலையில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்க சைபர் கிரைம் போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

பாஜக பிரமுகர் கல்யாணராமன் அவதூறாக பதிவிட்ட ட்விட்டர் கருத்துகளை அழித்துவிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தை முடக்குவதற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார் டுவிட்டர் நிறுவனத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி சென்னை எழும்பூரில் உள்ள நீதிபதி குடியிருப்பில் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com