ஹரியானா மாநிலம் கைதல் பகுதியில் உள்ள கியோரக் கிராமத்தை சேர்ந்த 20 வயதான பெண் கோமல் ராணி. இவர் குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்தவர். அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அங்கு அனில் என்னும் பட்டியலின இளைஞருடன் பழக்கம் ஏற்படவே இருவரும் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் கோமல் ராணியின் வீட்டார் அவரைத் தாங்கள் பார்த்து வைக்கும் நபரைத் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி வந்துள்ளனர். நாளுக்கு நாள் அவர்களின் வற்புறுத்தல் அதிகரிக்கவே இனி தாமதித்தால் தன்னை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் என்று எண்ணிய கோமல் ராணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி அனிலுடன் பதிவுத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தார் அடிக்கடி அனிலின் குடும்பத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர். ஆனாலும் கோமல் ராணி, தனது பெற்றோர் தன்மீது அதிக நேசம் வைத்திருப்பதாகவும் நிச்சயம் தங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் கோபத்தில்தான் இப்படி மிரட்டல் விடுக்கின்றனரே தவிர உண்மையில் அவர்கள் அப்படி எதுவும் செய்துவிட மாட்டார்கள் என்றும் கூறி வந்துள்ளார்.
அதே நம்பிக்கையில்தான் கடந்த 18ம் தேதி தனது தம்பி தன்னைக் காண வருவதாகக் கூறவே மிகவும் மகிழ்வோடு அவரை வரவேற்று அவருக்கு தேநீர் கொடுத்துள்ளார். ஆனால் அந்த 17 வயதான தம்பியோ கோமல் எதிர்பாராத நேரமாகப் பார்த்து தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கோமலை சரமாரியாக சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்தியே கோமல் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். சத்தம் கேட்டு தடுக்க வந்த அனிலின் தாய் மற்றும் சகோதரியின் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தனது சகோதரியைக் கொன்ற கையோடு வெளியே வந்த அந்த இளைஞன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் துப்பாக்கியுடன் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , ”சகோதரர்களே நான் செய்துவிட்டேன், இனி உங்கள் முறை... யாரெல்லாம் குஜ்ஜார் இனப் பெண்களைத் தொட நினைக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இதே கதிதான் நேர வேண்டும்“ என்று பேசியுள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் கோமல் ராணி வீட்டை விட்டு வந்தது முதலே அவரைக் கொலை செய்ய சதிதிட்டம் தீட்டி வந்ததும் அவரது அம்மா, அப்பா மற்றும் தாய் மாமா உள்ளிட்டோர் இந்த சதி வேலையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. தம்பிக்கு 17 வயதே ஆகியுள்ளதால் அவருக்கு தண்டனை குறைவாகக் கிடைக்கும் என்னும் காரணத்தால் அவரைக் கொலை செய்ய அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதே போன்றொரு சம்பவம் கடந்த 19ம் தேதி ஹரியாவில் உள்ள சிர்ஸா பகுதியிலும் நடந்துள்ளது. அதில் தனது 27 வயது மகளான சரவ்ஜீத் கவுர் தனது விருப்பத்திற்கு மாறாக ஒரு இளைஞனைக் காதலித்து வந்ததால் அவரின் தந்தையான ஜகதீஷ் சிங் என்பவர் தனது மகளை கொலை செய்திருந்தார். கொலை செய்துவிட்டு அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டதாக நாடகமாடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல ஹரியானாவில் உள்ள ஹிசார் பகுதியில் தேஜ்பிர் மற்றும் மீனா ஆகிய ஒரே சமூகத்தை சேர்ந்த இருவர் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பெண்ணின் பெற்றோர் விருப்பத்தை மீறி காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்துகொண்டிருக்கவே காவல் நிலையத்தில் பாதுகப்பு கேட்டுப் புகார் அளித்துள்ளனர். பின்னர் சில நாட்களில் அப்புகாரைத் திரும்பப் பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 24ம் தேதி ஹிசார் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் இருந்தபோது இருவரும் ஒரே சமயத்தில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரே மாதத்தில் சொந்தக் குடும்பத்தை சேர்ந்த நபர்களால் 4 உயிர்கள் பலியாகியுள்ள சம்பவம் ஹரியானாவில் பெண்களின் சுதந்திரத்தின் மீதுள்ள பார்வையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.