கும்பகோணத்தில் இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்ததாக பெற்ற குழந்தையை தாய், தாத்தா மற்றும் பாட்டியே இணைந்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மண்ணம்பந்தல் மூங்கில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகேயுள்ள ராஜகிரியைச் சேர்ந்த பைரோஸ் பானு என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அத்துடன் சமீபத்தில் பிறந்த 2 மாத பெண் குழந்தையும் இருந்தது.
குடும்பத்துடன் திருப்பாலத்துறையில் வசித்து வந்த கணேசன், தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்நிலையில், அவரை செல்போனில் தொடர்பு கொண்ட பைரோஸ் பானு, 2 மாத பெண் குழந்தை கமர்நிஷா உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த கணேசன் பாபநாபசம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பைரோஸ் பானுவுக்கு, மறுமணம் செய்து வைக்க அவரது தந்தை அக்பர் அலி, அவரது மனைவி மதீனா பீவி, ஆகியோர் திட்டமிட்டதாக தெரிகிறது.
இந்த திருமணத்திற்கு 2 மாத குழந்தை தடையாக இருந்ததாகவும், எனவே பைரோஸ் பானு, அவரது தந்தை, தாய் மற்றும் நண்பர் முகமது தல்கா ஆகியோர் கழுத்தை நெறித்து கொன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களை சிறையில் அடைத்தனர்.