செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் ஆப்ரேஷன் கிளீன் அப் எனும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை ஆவடி காவல் ஆணையராக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதில் பல இடங்களில் திடீர் சோதனைகள் மேற்கொண்டு கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆவடி அடுத்த திருநின்றவூர், முருகேசன் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (33). இவர், திருநின்றவூர் காந்தி சிலை அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கடை அருகே உள்ள ஸ்டோர் ரூமில் பதுக்கி வைக்கப்பட்டிந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 100 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, ராஜேஷ்குமாரை கைது செய்த திருநின்றவூர் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கஞ்சா குட்கா போன்ற போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.