ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் | ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுனர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல கடந்த ஒரு வார காலமாக நோட்டமிட்டது விசாரணையில் அம்பலம்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் புதிய தலைமுறை
Published on

செய்தியாளர் - அன்பரசன்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் இவருக்கு பழைய வீடொன்று இருந்துள்ளது. அதை இடித்து கட்டுமான பணி மேற்கொண்டு வந்திருக்கிறார். தினமும் அந்த பணிகளை பார்வையிடுவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி அங்கு வருவதையும், அதுவும் குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதையும் நோட்டமிட்டு ஆற்காடு சுரேஷின் சகோதரர் புன்னை பாலுக்கு தகவல் கொடுத்துள்ளார் ஒரு ஆட்டோ ஓட்டுநர்.

இவர் ஏன் புன்னை பாலுவுக்கு தகவல் கொடுக்க வேண்டும்? புன்னை பாலுவுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை? ஆற்காடு சுரேஷ் என்பவர் யார்? இப்படி பல கேள்விகள் உங்களுக்குள் எழலாம்... அதற்கான விடைகளை, இங்கே பார்க்கலாம்...

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்முகநூல்

2000-ல் தொடங்கிய பகை!

கடந்த 2000 ஆண்டு வடசென்னையை கலக்கி வந்த ரவுடியான நாயுடுவை ஆற்காடு சுரேஷ் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து பூந்தமல்லியில் வைத்து படுகொலை செய்ததில் இருந்து இப்பிரச்னையை தொடங்கியது.

நாயுடுவின் மரணத்தால் கதிகலங்கிபோன அவரது வலது கரங்களாக செயல்பட்டு வந்த தென்னரசு, ஆம்ஸ்ட்ராங் மற்றும் பாம் சரவணன் ஆகியோர், ஆற்காடு சுரேஷ் கொலை செய்ய பலமுறை முயற்சி செய்தனராம்.

இந்நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆம்ஸ்ட்ராங் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார். பல கட்டப்பஞ்சாயத்து, ஆருத்ரா மோசடி உள்ளிட்ட நிதி நிறுவன விவகாரத்தில் ஆற்காடு சுரேஷ் உடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார் ஆம்ஸ்ட்ராங்.

ஆற்காடு சுரேஷ்
ஆற்காடு சுரேஷ்

அச்சமயத்தில் ஆற்காடு சுரேஷை கொலை செய்ய தென்னரசு மற்றும் பாம் சரவணனிற்கு ஆம்ஸ்ட்ராங் பண உதவி மற்றும் அடைக்கலம் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்து, கடந்த 2015 ஆம் ஆண்டு தென்னரசை ஆற்காடு சுரேஷ் கும்பல் கொலை செய்கிறது.

இதனால் உடனடியாக ஆற்காடு சுரேஷை தீர்த்துக்கட்ட ஆர்ம்ஸ்ட்ராங் தீவிர ஸ்கெட்ச் போட்டதாகவும், கூட்டாளி ஒத்தக்கண்ணு ஜெயபால் மூலமாக கூலிப்படையை ஏவி கடந்த ஆண்டு (2023ல்) பட்டினபாக்கத்தில் வைத்து ஆற்காடு சுரேஷை கொலை செய்தாகவும் கூறப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்
2015ல் தென்னரசு, 2023ல் ஆற்காடு சுரேஷ், 2024ல் ஆம்ஸ்ட்ராங்... குலைநடுங்க வைக்கும் அதிர்ச்சி பின்னணி!

ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலுவையும் ஆம்ஸ்ட்ராங் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் புன்னை பாலு, தன்னை ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யும் முன் தான் அவரை கொலை செய்ய வேண்டும் என வெறிகொண்டிருந்திருக்கிறார். அதுவும், படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளிலோ, நினைவு நாளுக்குள்ளோ கொலை செய்ய வேண்டும் என இருந்துள்ளார். நேற்றைய தினம் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாள் என்பதால், நேற்று அவர்கள் திட்டமிட்டு ஆம்ஸ்ட்ராங் கொலையை செய்ததாக, விசாரணையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் புன்னை.

உளவுபார்த்த ஆட்டோ ஓட்டுநர்...!

இந்த விஷயத்தில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பவர், ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல கடந்த ஒரு வார காலமாக நோட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை - சரணடைந்தவர்கள்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை - சரணடைந்தவர்கள்

திருமலையின் தகவலின்பேரில், நேற்று உணவு டெலிவரி செய்வது போல நடித்து, அந்த இடத்துக்கு சென்றிருக்கிறார் ஆற்காடு சுரேஷின் மைத்துனர் அருள். அங்கு, ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டியுள்ளார். இதுதொடர்பான 8 பேர் நள்ளிரவில் போலீஸிடம் சரண் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com