அன்று விக்னேஷ்க்கு என்ன நடந்தது?-நேரில் கண்ட சாட்சியான ஆட்டோ ஓட்டுநர் போலீசில் வாக்குமூலம்

அன்று விக்னேஷ்க்கு என்ன நடந்தது?-நேரில் கண்ட சாட்சியான ஆட்டோ ஓட்டுநர் போலீசில் வாக்குமூலம்
அன்று விக்னேஷ்க்கு என்ன நடந்தது?-நேரில் கண்ட சாட்சியான ஆட்டோ ஓட்டுநர் போலீசில் வாக்குமூலம்
Published on

காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேகமான முறையில் மரணமடைந்த வழக்கில் தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருவரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, வாக்குமூலம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

தலைமைச் செயலக காலனி காவல் நிலைத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேக மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்குs சென்று சிபிசிஐடி போலீசார் தடயங்களை சேகரித்தனர். முதல் தகவல் அறிக்கை உள்பட ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் பெற்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தலைமைச் செயலக காலனி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் இன்று காலை 11 மணிக்கு எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் டிஎஸ்பி சரவணன் முன்பு விசாரணைக்காக ஆஜரானார். கடந்த 18ஆம் தேதி இரவு முதல் விக்னேஷ் சந்தேக மரணம் வரை என்னென்ன நடந்தது? என்பது தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி சரவணன் காவல் ஆய்வாளர் செந்தில் குமாரிடம் விசாரணை நடத்தினார்.

கத்தியுடன் கைதுசெய்தது தொடர்பாக சுரேஷ், விக்னேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது குறித்தும், சந்தேக மரணம் குறித்தும் காவல் ஆய்வாளர் செந்தில் குமாரின் வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையில் கடந்த 18ஆம் தேதி பிரபுவின் ஆட்டோவில்தான் சுரேஷ், விக்னேஷ் வந்துள்ளனர். கெல்லீஸ் சிக்னலில் பிடித்தபோது விக்னேஷை காவல்துறையினர் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநர் பிரபு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் பிரபு விசாரணைக்காக எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் இன்று ஆஜராக சம்மன் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி பிரபு விசாரணைக்காக இன்று மதியம் 2.30 மணியளவில் ஆஜரானார். விசாரணை அதிகாரி டிஎஸ்பி சரவணன் ஆட்டோ ஓட்டுநர் பிரபுவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தார். இரவு 7.30 மணி வரை சிபிசிஐடி போலீசார் பிரபுவிடம் விசாரணை நடத்தினர்.

கடந்த 18ஆம் தேதி சுரேஷ், விக்னேஷ் எப்போது ஆட்டோவில் ஏறினார்? இருவரையும் முன்பே தெரியுமா? எந்தெந்த போலீசார் வாகன சோதனையில் மடக்கினர்? புரசைவாக்கம் கெல்லீஸ் சிக்னலில் நடந்தது என்ன? என்பது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் பிரபுவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அவரது வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலக காலனி காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக நேரில் அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்றும், அன்று பணியில் போலீசார் குறித்த அடையாள அணிவகுப்பு நடத்தப்படும்போது அடையாளம் காட்ட வேண்டும் என்றும் ஆட்டோ ஓட்டுநர் பிரபுவுக்கு சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கிடையில் இறந்து போன விக்னேஷின் சகோதரர் வினோத்திற்கு எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பி உள்ளார். சந்தேக மரண வழக்கை எழும்பூர் பெருநகர குற்றவியல் 2-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் யஸ்வந்த் ராவ் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் விக்னேஷின் சகோதரர் வினோத்திற்கு மாஜிஸ்திரேட் சம்மன் அனுப்பி உள்ளார். வருகிற 6ஆம் தேதி நாளை மறுநாள் விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது காவல்துறையினர் ரூ. 1 லட்சம் லஞ்சமாக கொடுத்ததாக பணத்தை வினோத் மாஜிஸ்திரேட்டிடம் வழங்க முடிவு செய்துள்ளார். மேலும் விக்னேஷ் மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் குறித்து வாக்குமூலம் அளித்து எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- சுப்ரமணியன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com