புதுக்கோட்டையில் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான 70 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக 6 பேரை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் புதுத்தெருவில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சொந்தமான இடம் உள்ளது. ரூ.12 கோடி மதிப்பிலான 2148 சதுர மீட்டர் அளவுள்ள மனையிடம் மற்றும் அதில் கட்டப்பட்டுள்ள கிடங்கு அமைந்துள்ள இடம் ஆகியவற்றை போலியான ஆவணம் தயார் செய்து அந்த சொத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து அரசு சார் துணை பதிவாளர் மற்றும் களைத்தல் அலுவலரான சுல்தான் மைதீன், ஜஹவர் நில அபகரிப்பு சிறப்பு பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தார். இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன், லலிதா புதுக்கோட்டை மெய்வழிச் சாலையை சேர்ந்த அபிஷேகம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், புதுக்கோட்டை நகர் பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் மேலும் சில பகுதிகளில் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் நிலம் மற்றும் வீடுகளை குறிவைத்து 58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ள சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் பெயர் மாற்றம் செய்து மோசடி செய்து 70 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு மற்றும் தனியார் சொத்துக்களை 6 பேர் கொண்ட கும்பல் பத்திர பதிவு செய்து மோசடி செய்ய முயன்றது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ஐந்து பேர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நில அபகரிப்பு உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த போஸ், சாலை அபிஷேகன், ராஜமாணிக்கம், கண்ணன், சரவணன், மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் ஆகிய ஆறு பேரை புதுக்கோட்டை நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.