விழுப்புரத்தில் பிளஸ் டூ படிக்கும் மாணவியரிடம் நூதன முறையில் தங்க நகை பறித்த ஆசாமி குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சென்னையில் மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணாவி கடந்த 12ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது திண்டிவனம் பேருந்து நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் அவருடன் பேசத் தொடங்கியுள்ளார்.
மஞ்சள் உடை அணிந்து முகத்தில் மாஸ்க் அணிந்த நிலையில் இருந்த அந்த மர்ம நபர், அந்த பெண்ணிடம் உன்னுடைய அப்பா அம்மா இருவரது உயிருக்கும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார். அவற்றை போக்க வேண்டும் என்றால் சில சடங்குகள் செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணை விழுப்புரம் அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் விழுப்புரத்தில் உள்ள பிரபல துணிக்கடைகளில் அவர் துணி வாங்குவதற்கு செல்வது போல அந்தப் பெண்ணையும் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சடங்கிற்கு செலவு இருப்பதாக கூறி உன் கழுத்தில் இருக்கிற தங்க நகையை கொடு என்று கேட்டுள்ளார். அந்த மாணவியும் அணிந்திருந்த தங்கச்செயினை அவரிடம் கொடுத்துள்ளார். நகையை பெற்றுகொண்ட நிலையில் திடீரென அந்த மர்ம நபர் தலைமறைவாகிவிட்டார்.
இந்த தகவலை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் பகுதியில் அந்த மர்ம நபரின் நடமாட்டம் குறித்து பல சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். அந்த காட்சிகளில் இதற்கு முன்னரும் அந்த மர்ம நபர் திண்டிவனத்தில் வேறு ஒரு பள்ளி மாணவியை பேக்கரிக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் அந்த மர்ம நபரை உடனடியாக கண்டுபிடிக்க கோரி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்துள்ளார். வழக்கை எடுத்துகொண்ட போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜோதி நரசிம்மன்