செய்தியாளர்: பிரேம்குமார்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது மகன் ராமன். இவர், இந்திய ராணுவத்தில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளம்பெண் ஒருவர் உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், “ராணுவ வீரர் ராமன், என்னுடன் நட்பாக பழகி திருமணம் ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். இதையடுத்து கருவுற்று இருந்த என்னை மிரட்டி கருவை கலைக்க வைத்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார்” என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி ராணுவ வீரரான ராமனுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து உசிலம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த ராமன், தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்தாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக ராணுவ வீரர் ராமனை கைது செய்த போலீசார், நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, ராமன் இளம்பெண் வீட்டினரை மிரட்டியதாக கூறி இரு பிரிவினரும் காவல் நிலையம் முன்பே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.