செய்தியாளர்: செந்தில் குமார்
அரியலூர் மாவட்டம் ஏழேரி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 22.12.2018 அன்று இரவு சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார். பின்னர் திரும்பி வராததால் சிறுமியின் தந்தை கீழப்பழுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கோப்பிலியன் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த அருள் செல்வன் என்பவர் சிறமியை கடத்திச் சென்றதும் அவருக்குத் துணையாக சிறுமியின் சித்தப்பா பழனிச்சாமி இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வழக்குப் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி செல்வம், குற்றவாளியான அருள் செல்வனுக்கு சிறுமியை கடத்திச் சென்றதற்காக 10 ஆண்டுகளும் பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10,000 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அதேபோல் சிறுமியை கடத்துவற்கு உதவியாக இருந்த சிறுமியின் சித்தப்பா பழனிச்சாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார். நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பால் அரியலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.