அரியலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, தமிழ் ஆசிரியர் அருள் செல்வன் என்பவர் நேற்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து மாணவி, பொறுப்பு தலைமை ஆசிரியர் லதாவிடம் புகார் கொடுத்துள்ளார். அப்போது இதே ஆசிரியர் கடந்த மாதம் 10-ஆம் வகுப்பு படிக்கும் தன்னிடமும் பாலியல் தொந்தரவு செய்ததாக மற்றொரு மாணவியும் புகார் கொடுத்துள்ளார்.
இதை அறிந்த கிராம மக்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அரியலூர் டி.எஸ்.பி மதன், பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இதில், பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மையென தெரியவர தமிழ் ஆசிரியர் அருள் செல்வன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, குற்றத்தை மறைக்க முயற்சி செய்ததாகவும், 'நீ தான் தப்பு செய்தாய் என மாற்றி கூறுவேன்' என மிரட்டியதாகவும் தெரிகிறது. இதனால் சட்டம் 21 படி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியையும் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரை முருகன் ஆகியோர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.