ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல அசைவ ஓட்டலில் உணவு சாப்பிட்ட இளைஞர்களிடம் பில்லை நீட்டிய சப்ளையரை அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் இயங்கி வரும் தனியார் அசைவ உணவகத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு, மேவலூர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சார்ஜன், விஜய், கீவளூர் கிராமத்தைச் சேர்ந்த ராம் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என 6-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சாப்பிட்டுள்ளனர்.
அப்போது சாப்பிட்டதற்கான பில்லை சப்ளையர் அவர்களிடம் கொடுத்துள்ளார். அதற்கு அந்த இளைஞர்கள், ‘எங்களுக்கே பில் கொடுக்கிறாயா?’ எனக் கூறி இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அடி உதைக்கு பயந்து போய் ஏசி அறையில் மறைந்திருந்த சப்ளையரை தேடிக் கண்டுபிடித்த கும்பல் ஏசி அறையின் உள்ளே சென்று மீண்டும் சப்ளையரை சரமாரியாக தாக்கியுள்ளது.
இதை தடுக்கச் சென்ற மேலாளரையும் தாக்கிய அவர்கள் ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று விட்டனர். இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஹோட்டல் மேலாளர் புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை தேடி வந்தனர்.
நிலையில் கீவலூர் பகுதியைச் சேர்ந்த ராம் (22) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களான சார்ஜன், விஜய் உட்பட தலைமறைவாக உள்ள அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
உணவகத்தில் வேலை செய்யும் சப்ளையர் மற்றும் மேனேஜரை இளைஞர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது