ஆந்திர மாநிலம் நெல்லூரில், செம்மரம் வெட்டி கடத்த முயன்ற தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலாளர்கள் உட்பட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தானம் அருகே உள்ள, சென்னை - நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ய முயன்றனர். அப்போது லாரியில் இருந்தவர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். மேலும், கோடாரிகளை வீசி காவல்துறையினர் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். இருப்பினும், காவல்துறையினர் லாரியையும் அதனுடன் சென்ற காரையும் தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, வாகனங்களில் இருந்த புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த 55தொழிலாளர்கள் உட்பட 58பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 45செம்மரக் கட்டைகள், கோடாரிகள், வாகனங்கள் மற்றும் 75ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த பெருமாள் வேலுமலை கூறியதன் பேரில், செம்மரக்கடத்தலில் ஈடுபட முயன்றதாக கைதானவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செம்மரக்கட்டைகளை சென்னைக்கு கொண்டு சென்று, அங்கிருந்து சீனா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. செம்மரக் கட்டைகளை கடத்த முயன்ற நபர்களை கைது செய்த காவல்துறையினரை, நெல்லூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி ஊக்கப் பரிசுகளை வழங்கினார்.