செம்மர கடத்தலில் ஈடுபட முயன்ற நபர்களை சுட்டுக்கொன்றால், போலீசார் மீது சட்டரீதியான விசாரணை நடத்த கூடாது என ஆந்திர அரசுக்கு அம்மாநில ஐஜி கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திர மாநில அரசுக்கு செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப் படை ஐஜி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், செம்மர கடத்தலின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினால் அது பற்றி விசாரிக்க உத்தரவிடக் கூடாது என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில், கடத்தல்காரர்களால் காவலர்கள் தாக்கப்படுவதை தடுக்க பதில் தாக்குதலுக்கு அனுமதிக்க வேண்டும். செம்மரக் கடத்தல் தடுப்பு போலீசார் மீது சட்ட விசாரணை கிடையாது என்று அறிவிக்க வேண்டும். வனப்பகுதியில் பணியாற்றும் போலீசாருக்கு சட்டப்பாதுகாப்பு தர வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் பணியாற்றும் போலீசார் பதில் தாக்குதல் நடத்தும் போது சம்பந்தப்பட்ட நபர் உயிரிழந்தால் காவலர்கள் மீது சட்ட விசாரணை நடத்தக் கூடாது என்றும் பகிரங்கமாகவே அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் செம்மரம் கடத்தியதாக திருப்பதி வனப்பகுதியில் திருவண்ணாமலை, கிருஷ்ணாகிரி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் அடிக்கடி ஆந்திர போலீசால் கைது செய்யப்பட்டு வருவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.