ஆந்திரப் பிரதேசத்தின் அனந்த்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிவேகத்தில் சென்ற கார் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் 35 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்ததுடன் அவரது உடலானது விபத்து ஏற்படுத்திய காரின் கூரையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்தது என்ன என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கல்யாணதுர்கம் - அனந்தப்பூர் ஆத்மகூர் ஒய் கொத்பள்ளி கிராமத்தின் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், இரவு 10.30 மணியளவில் பெங்களூரிலிருந்து அதிவேகத்தில் ஒரு கார் வந்துள்ளது. அதேசமயம், காரின் எதிர்புறம் 35 வயது மதிக்கத்தக்க குடேரு தொகுதி சோழசமுந்திரம் கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் மெக்கானிக்கான ஜின்னே யெர்ரிசுவாமி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.
அதிவேகத்தில் வந்த கார் எதிரே வந்த இருசக்கரவாகனத்தில் மோதியதில், ஜின்னே யெர்ரிசுவாமி தூக்கி எறியப்பட்டு காரின் மேல் கூறையில் விழுந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் பீதியில், யாரும் இல்லாத அப்பகுதியிலிருந்து தப்பிக்க நினைத்து காரை நிறுத்தாமல் ஓட்டிச்சென்றிருக்கிறார். அவருக்கு தனது கார் கூறையின் மேல் ஜின்னே யெர்ரிசுவாமி விழுந்து கிடந்தது தெரியவில்லை.
விபத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்துவிடலாம் என்று நினைத்த கார் ஓட்டுநர் கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் தாண்டி ஹனிமிரெட்டி பல்லே கிராமத்தை அடைந்ததும், அவ்வழியாகச் சென்ற சிலர், காரின் மேற்கூரையில் யெர்ரிஸ்வாமியின் உடல் ரத்த வெள்ளத்தில் தொங்கியதைக் கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக அவர்கள் காரை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். அப்போதுதான் அவர் தனது கார் கூரையில், சடலத்துடன் பயணிப்பதை உணர்ந்திருக்கிறார். உடனே காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.
அங்கிருந்தவர்கள் உடனடியாக போலிசாரிடம் தகவல் தெரிவிக்கவும், சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் கிடைக்கப்பெற்ற விவரங்களின் அடிப்படையில் தலைமறைவான ஓட்டுநரை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலிசார் கூறுகையில், “கார் பெங்களூரைச் சேர்ந்தது, ஆனால் டிரைவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. டிரைவர் குடிபோதையில் இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
பலியானவரின் உடல் ஆத்மகூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு திங்கள்கிழமை மதியம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.