சீனாவை மையமாக வைத்து இயங்கும் ஹேக்கர்கள் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 40 ஆயிரத்திற்கு மேலான இணைய தாக்குதல்களை இந்தியாவில் செய்ய முயற்சித்திருப்பதாக மகாராஷ்டிர சைபர் க்ரைம் போலீசார் கூறியுள்ளனர்.
கடந்த வாரம் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தினருக்கும் சீன ராணுவ படைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சீனாவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. சீனாவும், இந்தியாவும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டனர்.
இந்நிலையில் சீனாவை தளமாகக் கொண்ட ஹேக்கர்கள் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் இந்தியாவிலுள்ள தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் வங்கித் துறைகளை குறிவைத்து ஏறக்குறைய 40,000 க்கும் மேற்பட்ட இணைய தாக்குதல்களுக்கு முயற்சித்துள்ளதாக மகாராஷ்டிராவின் உயர்காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து பேசியுள்ள சைபர் பிரிவின் சிறப்பு காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் யஷஸ்வி யாதவ், “கிழக்கு லடாக்கில் இரு நாடுகளுக்கிடையில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து எல்லையைத் தாண்டி ஆன்லைன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மேற்கொண்டு மகாராஷ்டிரா சைபர் க்ரைம் பிரிவினர் இந்த முயற்சிகள் குறித்து திரட்டிய தகவல்களைத் தொகுத்து பார்த்த போது, அவற்றில் பெரும்பாலானவை சீனாவிலுள்ள செங்டு பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் தகவல்களின்படி, இந்தியவிலுள்ள ‘சைபர்ஸ்பேஸ்’ மீது கடந்த நான்கு, ஐந்து நாட்களில் குறைந்தது 40,300 இணைய தாக்குதல்கள் முயற்சி செய்யப்பட்டுள்ளன”என்றும் அவர் விளக்கியுள்ளார். எனவே இந்திய இணைய பயனாளர்கள் இத்தகைய தாக்குதல்களின் அச்சுறுத்தல் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா சைபர் க்ரைம் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஹேக்கர்கள் சுமார் 20 லட்சம் இந்திய மின்னஞ்சல் ஐடிகளில் இருந்து தரவுகளை திரட்ட முயற்சித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.