இலங்கையிலிருந்து கோவைக்கு விமான மூலம் கடத்தி வரப்பட்ட தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், கடத்தலுக்கு உதவிய விமான நிலைய ஊழியர்கள் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
இலங்கையில் இருந்து விமான மூலம் கோவைக்கு தங்கம் கடத்தப்படவுள்ளதாக வந்த தகவலின்படி கோவை விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர்களை கோவை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்தனர். அப்போது விமான நிலைய ஊழியர்கள் இருவரின் உதவியுடன் தங்கம் கடத்தப்படுவதை உறுதி செய்த டி.ஆர்.ஐ. அதிகாரிகள், விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கடத்தல்காரர்களுக்கு அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டதை தெரியாத வகையில் செயல்பட கூறிய அறுவுறுத்தலின் பேரில், ஊழியர்கள் இருவரும் ஒன்றும் தெரியாத மாதிரி நடந்துக்கொண்டனர்.
அப்போது, கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் கோவை விமான நிலையம் வந்த விமான பயணிகள், ஏரோப்ரிட்ஜ் அருகே கடத்தல் தங்கத்தை விமான நிலைய ஊழியர்களிடம் கொடுக்கும்போது, அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த டி.ஆர்.ஐ. அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டனர். அவர்களிடமிருந்து ரூ.55 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ எடைக்கொண்ட 16 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடத்தல் தங்கத்தை வாங்குவதற்காக கோவை விமான நிலையத்திலிருந்து 3கி.மீ., தொலைவில் காரில் காத்திருந்தவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து கோவை விமான நிலைய ஊழியர்கள் மனோஜ், சதீஷ், இலங்கையிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த திருச்சியை சேர்ந்த பயணி சையது அபுதாஹிர், ராஜா மற்றும் ஓட்டுனர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், திருச்சியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் மிஜ்ரா என்பவரை இந்தக் கடத்தலின் முக்கிய நபராக விசாரிக்க டி.ஆர்.ஐ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.