செய்தியாளர்: I.M.ராஜா
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள நெய்வாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் சாதி மறுப்பு திருமணம் செய்தற்காக ஆணவக் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். இந்த வழக்கில் ஐஸ்வர்யாவின் அப்பா பெருமாள், அம்மா ரோஜா ஆகியோரை போலீசார் கடந்த புதன்கிழமை கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து இருவரும் 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நெய்வாவிடுதி கிராமத்தைச் சேர்ந்த உறவினர்களான சின்ராசு (31), செல்வம் என்ற திருச்செல்வம் (39) மற்றும் முருகேசன் (34), ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு நேற்று மாலை பட்டுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் மூன்று பேரை இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உறவினர்களான ரெங்கராஜ் (57), பிரபு (36), சுப்பிரமணியன் (56) ஆகியோரை கைது செய்துள்ள போலீசார் அவர்களை பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இன்றும் பட்டுக்கோட்டை நீதிமன்ற வளாகம் பரபரப்பாகவே காணப்படுகிறது.