‘என் அம்மாவ காப்பாத்துங்க’ - பதறிய சிறுவனை விரட்டிக் கொன்ற கொடூரன்!

‘என் அம்மாவ காப்பாத்துங்க’ - பதறிய சிறுவனை விரட்டிக் கொன்ற கொடூரன்!
‘என் அம்மாவ காப்பாத்துங்க’ - பதறிய சிறுவனை விரட்டிக் கொன்ற கொடூரன்!
Published on

புதிய திருமணம் செய்வதற்காக மனைவியை கடுமையாக தாக்கிவிட்டு, மகனை கொன்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் அட்டிவத்தா கிராமத்தில் வசித்த தம்பதியினர் ராமமூர்த்தி மற்றும் ஜோதி. ஜோதிக்கு ஏற்கனவே கிரண் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அப்போது கிரண், ஜோதி தம்பதியினர் ஹாஸ்கோட் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அட்டிவத்தா பகுதியில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஹாஸ்கோட் உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஜோதி பிரிந்து வாழ்ந்துள்ளார். அந்த நேரத்தில் உடன் பணிபுரியும் ராமமூர்த்தியுடன் காதல் ஏற்பட்டுள்ளது. 5 வருடம் நீடித்த இந்தக் காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. ஜோதி ஏற்கனவே திருமணம் ஆகியவர் அவருக்கு, கவுதம் என்ற மகன் இருக்கிறார் என்பதை அறிந்தே ராமமூர்த்தி திருமணம் செய்துள்ளார். ஆனால் இந்தத் திருமணத்தில் ராமமூர்த்தியின் பெற்றோருக்கு விருப்பம் இல்லை. எனவே மகனுக்கு வேறு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனே இருந்துள்ளனர். நாட்கள் ஓட ஜோதி மகனுக்கு 9 வயது ஆகியது. அவர் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ஒரு பெண்ணை தங்கள் ராமமூர்த்திக்கு பேசி முடித்துவிட்டனர், அவரது பெற்றோர். 

இந்த விவகாரத்தை ராமமூர்த்தியிடம் கூற, ஆரம்பத்தில் யோசித்துள்ளார். பின்னர் பெற்றோரின் பேச்சால், திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். இந்த விஷயத்தை ஜோதியிடம் ராமமூர்த்தி கூற அவர் மறுத்துள்ளார். ஒருவழியாக பேசி ஜோதியை திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்துவிட்டார் ராமமூர்த்தி. திருமணம் நெருங்க, நெருங்க ஜோதியின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் திருமணத்தை கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. ‘திருமணத்தை நிறுத்திவிடுவேன்’ என ஜோதி மிரட்டியுள்ளார். இதனால் ஜோதியை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார் ராமமூர்த்தி. ‘சரி, திருமணம் வேண்டாம்’ நிறுத்திவிடலாம் எனக்கூறி ஆசை வார்த்தைகாட்டியுள்ளார். தாங்கள் குடியிருக்கும் பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீ தூரத்தில் உள்ள கிராமத்தில் உள்ள ராமேஸ்வரா கோயிலுக்கு ஜோதியையும், அவரது மகனையும் அழைத்துச்சென்றுள்ளார். காலை 5 மணிக்கு கோயில் இருக்கும் இடத்தை அடைந்துள்ளனர். 

கோயிலுக்கு சென்றதும், சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பின்னர் போகலாம் என கூறியுள்ளார் ராமமூர்த்தி. மூவரும் கோயில் வளாகத்தின் அருகிலேயே தூங்கியுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு தான் சென்று உணவு வாங்கி வருவதாகக் கூறி, இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ராமமூர்த்தி சென்றுள்ளார். ஆனால் உணவு வாங்க செல்லாமல் சிறிது தூரம் சென்று ஒரு கல்லை கையில் எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார். அவர் வந்து பார்க்கும் போது ஜோதியும், கவுதமும் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். தான் கையில் வைத்திருந்த கல்லால், ஓங்கி ஜோதியின் தலையில் அடித்துள்ளான் கொடூரன் ராமமூர்த்தி. இதில் ஜோதி படுகாயமடைந்து மயக்க நிலையை அடைந்துள்ளார். சத்தம் கேட்டு கண்விழித்து பார்த்த கவுதம், ராமமூர்த்தி தனது அம்மாவை கல்லால் அடிப்பதைக்கண்டு அதிர்ந்துபோயுள்ளார். என்ன செய்வதென்று அறியாத அந்தச் சிறுவன், ‘என் அம்மாவ காப்பாத்துங்க’ என்று பதறிய படி, கத்திக்கொண்டே ஓடியுள்ளார். சிறுவன் யாரிடமாவது கூறிவிடுவார் என்று எண்ணிய கொடூரன், அச்சிறுவனை விரட்டிப்பிடித்து அதே கல்லால் தலையில் அடித்துள்ளான். சிறுவன் ரத்த வெள்ளத்தில் விழுந்து, உயிரிழந்தார். சிறுவனை தூக்கிச்சென்று அருகில் இருந்த புதரில் வீசியுள்ளான் கொடூரன். திரும்பி வந்து பார்த்தபோது மயங்கிய நிலையிலேயே ஜோதி இருந்துள்ளார். ஜோதியும் இறந்துவிட்டதாக நினைத்த கொடூரன் ராமமூர்த்தி அங்கிருந்து சென்றுவிட்டான். 

சிறிது நேரத்திற்குப் பிறகு கண்விழித்த ஜோதி, தன்னை யார் தாக்கியது என தெரியாமல் காப்பற்றுங்கள் என கத்தியுள்ளார். கோயிலுக்கு வரும் மக்கள் ஓடிவந்து ஜோதியை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காவல்துறையினர் வந்து விசாரிக்க, ஜோதி தனது முதல் கணவர் கிரண் மீது சந்தேகம் தெரிவித்துள்ளார். அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்த போது, சம்பவம் நடக்கும் சமயத்தில் அவர் வேறு இடத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராமமூர்த்தியை விசாரிக்க நினைத்து அவன் வீட்டுக்கு சென்ற போது அவர் இல்லை. நீண்ட தேடலுக்கு ராமமூர்த்தியின் போன் மூலம், அவனை பிடித்துள்ளனர் காவல்துறையினர். காவலர்கள் பிடித்ததுமே பதட்டமடைந்துள்ளான். அவன் மீது சந்தேகம் அதிகரிக்க காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் நடந்ததை கூறி, குற்றத்தை ஒப்புக்கொண்டான் ராமமூர்த்தி. அவனைக் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். தற்போது உயிருக்கு போரடும் நிலையில், ஜோதி சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com