தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்த ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த 2021 ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி தாக்கல் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகிய இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டு, தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த இரண்டு வருடங்களாக விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில், டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 20,500 ரூபாய் அபராதம் மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் அவர்களுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதித்து விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.
இதனை அடுத்து ராஜேஷ் தாஸ் தரப்பு வழக்கறிஞர்கள் அபராத தொகையை கட்டிவிட்டு அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி புஷ்பரானி இடம் மனு கோரி இருந்தனர். இந்நிலையில், இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்திரவிட்டார்.