அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் அளித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
முன்னதாக, 2 மணி நேர விசாரணைக்கு பிறகு சைதாப்பேட்டை 17வது நீதிமன்ற நீதிபதி முன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆஜர்படுத்தப்பட்டார். திருமணம் செய்வதாக ஏமாற்றியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் மணிகண்டன் மீது துணை நடிகை அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் இன்று கைது செய்து, சென்னை அழைத்து வந்து அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து மணிகண்டனிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் உதவியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கில் 376Ipc பாலியல் பலாத்தகாரம் என்ற அடிப்படையில் எடுத்தகொள்ள முடியாது, பெண்ணின் விருப்பத்துடன் தான் இருவரும் பழகி உள்ளனர், எனவே வழக்கின் பிரிவை மாற்ற சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
மணிகண்டன் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளான 313- பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல், 323 - அடித்து காயம் ஏற்படுத்துதல், 417 - நம்பிக்கை மோசடி, 376 - பாலியல் வன்கொடுமை, 506 (1) - கொலை மிரட்டல், மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவான 67(a) - தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.