போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகை ராகினி, அவருக்கு எடுக்கப்பட்ட சிறுநீர் பரிசோதனையின்போது சிறுநீருடன் தண்ணீரைக் கலந்து கொடுத்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 4ஆம் தேதி போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கன்னட நடிகை ராகினி திவேதியை பெங்களூர் போதைத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர் போதைப் பொருள் உட்கொண்டாரா என்பதைச் சோதனை செய்ய கடந்த வாரம் அவருக்கு கே.சி பொது மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட ராகினியின் சிறுநீரில் தண்ணீர் கலந்திருப்பதை மருத்துவர்கள் கணடறிந்தனர். இதனை அவர்கள் ராகினி கொடுத்த சிறுநீரின் வெப்ப அளவை வைத்துக் கண்டறிந்தனர். இதனையடுத்து அதிக தண்ணீரை குடித்த ராகினி மீண்டும் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேலும் அதிகாரிகள் தரப்பில் கூறும் போது, “ ராகினிக்கும், ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவராகச் சொல்லப்படும் சிமோன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. போதைப் பொருள் தொடர்பான தகவல்களை பரிமாறுவதற்கு பிரேத்யக கோடுகளை ராகினி பயன்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்துதான் அவருக்கு சிறுநீர் பரிசோதனை செய்ய முடிவெடுத்தோம்.
சிறுநீர் மற்றும் தலைமுடி பரிசோதனை முடிவுகளை வைத்து, சில குறிப்பிட்ட கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட நபர் என்ன விதமான போதை பொருளை உட்கொண்டார் என்பதைக் கண்டறிய முடியும்” என்றனர். ராகினியிடம் இருந்து தலைமுடி பரிசோதனைக்காக வாங்கப்பட்டதாக என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.