உதகையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ராணுவ வீரர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளப் ரோடு பகுதியில் வசித்து வருபவர் பவுலோஸ். இவருடைய மகன் கிறிஸ்டோபர் ஜம்மு காஷ்மீரில் இராணுவச் சிப்பாயாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் குன்னூர் வந்துள்ள கிறிஸ்டோபர் குன்னூர் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவியின் பெற்றோர்கள் பள்ளி போன எங்களது மகளை காணவில்லை என்று மேல்குன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மேல்குன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணமல் போன சிறுமியைத் தேடிவந்தனர். இந்தச் சூழலில் போலீசார் தேடுவதை அறிந்த கிஸ்டோபர், சிறுமியுடன் குன்னூர் வந்துள்ளார். அப்போது போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் கிறிஸ்டோபரை விசாரணை செய்தனர். அதில் சிறுமியைக் கடத்திச் சென்று இரண்டு நாட்கள் வேளாங்கண்ணியில் தங்கியிருந்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து கிறிஸ்டோபரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலிசார், உதகை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள். மகளிர் நீதிமன்ற நீதிபதி முரளிதரன் விசாரித்து 15 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கிறிஸ்டோபர் குன்னூர் சிறையில் அடைக்கப்பட்டார்.