மதுரை திருமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கும் பெண், முதியவர்களுக்கு ஊசி செலுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை திருமங்கலம் அருகே உள்ள பொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த மருது என்ற பெண், அந்த பகுதியில் உள்ள கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி, பின்னர் அவர்களுக்கு தான் வைத்திருக்கக்கூடிய மருந்துகளை ஊசிகள் மூலமாக செலுத்தும் காட்சிகள், சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவம் படிக்காத நிலையில் பொதுமக்களுக்கு ஊசியை செலுத்தி வரும் அவரால், ஏதும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் மருது என்ற அந்த பெண் ஊசி போடும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில், அதில் ஒவ்வொரு வீடாக செல்லும் அவர், கையில் வைத்திருக்கும் ஊசியில் மருந்தை ஏற்றி, அதனை மக்களுக்கு செலுத்துவது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதே போன்று அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு கிளினிக் என்ற பெயரில் ஊசி மருந்துகளை ஏற்றி சிகிச்சை அளிப்பவர்கள் மீது, கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.