டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் கைது

டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் கைது
டாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் கைது
Published on

அரூர் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி பணம் பறித்த 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்து தீவர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள நரிப்பள்ளியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மகரஜோதி(44). இவர், நரிப்பள்ளி-பெரியப்பட்டி சாலையிலுள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக உள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு மது விற்பனைத்தொகை ரூ.80 ஆயிரத்தை இருச்சக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு நரிப்பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, இருச்சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் மகரஜோதியை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது கைகளின் தோல்பட்டையில் குண்டு துளைத்தது. நிலை தடுமாறி கீழே விழுந்த மகரஜோதியிடம் இருந்த பணம் ரூ.80 ஆயிரத்தை பறித்துக் கொண்டு, மர்ம நபர்கள் தப்பினர். 

இந்தச் சம்பத்தை தொடர்ந்து, தகவலறிந்து வந்த தனிப்படை போலீஸார் அரூர்-நரிப்பள்ளி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மொண்டுகுழி அருகேயுள்ள தெத்துமுனியப்பன் கோயில் பகுதியில் சந்தேகமான முறையில் வந்த இருவரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  அவர்கள் ஊத்தங்கரை கலைஞர் நகரைச் சேர்ந்த சின்னக்கண்ணு மகன் வெங்கடேசன்(32), ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த நாகேந்திரன் மகன் பரதன்(24) என்பதும் தெரியவந்தது. மேலும், சோதனையில் அவர்களிடமிருந்து ரூ.80 ஆயிரம், ஒரு நவீன ரக கைத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள், ஒரு மோட்டார் சைக்கிளை போலீஸார் பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.

பின்னர் தனிப்படை போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 15.12.2018-இல் ஊத்தங்கரை காட்டேரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் ஊழியர்கள் இருவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு ரூ. 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதும், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பெருமட்டம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் மீது 25.1.2019-இல் தாக்குதல் நடத்தி, பணம் பறிக்க முயற்சித்ததும் தெரிய வந்தது. இந்த இரண்டு சம்பவங்களிலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வெங்கடேசன், பரதன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, ஊத்தங்கரைச் சேர்ந்த வெங்கடேசனின் வீடு மற்றும் அவரது உறவினர் வீடுகளில் தனிப்படை போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையில் வெங்கடேசன் வீட்டில் இருந்து ஒரு நவீன ரக கைத்துப்பாக்கியும், ஒரு நாட்டுத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எனவே பிடிபட்ட இருவரிடமும் தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.மகேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இந்த சூழலில் இவர்களை பிடிக்க உதவிய தலைமை காவலர் மற்றும் ஊர் காவல்படை சேர்ந்த காவலருக்கு காவல் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

மேலும், வெங்கடேசன் சண்டைக் கோழிகளை வளர்த்து வருவதால் சண்டைக் கோழிகளை விற்பனை செய்யும் போது வட மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளைக் கும்பலிடம் இருந்தும் துப்பாக்கிகளை வாங்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் சென்னையில் ரவுடி ஒருவரிடம் நவீன ரக துப்பாக்கியை வாங்கியதாக வெங்கடேசன் கூறுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com