கோவையில் பெண் வழக்கறிஞருக்கு வாட்ஸ் அப்பில் தொடர்ந்து ஆபாச புகைப்படங்களை அனுப்பிய நபரை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து அந்த நபரிடம் இதுபோன்று அனுப்பாதீர்கள் என்று அந்த பெண் வழக்கறிஞர் எச்சரித்தபோதும் தொடர்த்து அந்த நபர் ஆபாச படங்களை அனுப்பி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் இதுதொடர்பாக மாநகர சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது தொலைபேசி எண்ணிலிருந்து அந்த ஆபாச புகைப்படங்கள் வந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து போலீசார் கார்த்திக்கேயனை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கார்த்திகேயன்தான் அந்த பெண்ணிற்கு ஆபாச படங்களை அனுப்பியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.