சென்னை தாம்பரத்தில் வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல வந்து 82 வயது பாட்டியின் மீது மிளகாய் பொடி தூவி பெண் ஒருவர் செயின் பறிக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த ரவிக்குமார், தனியார் மழலை பள்ளி நடத்தி வருகின்றார். இவர் தனக்கு சொந்தமான வீட்டை வாடகை விடுவதற்காக அறிவிப்பு செய்திருந்தார். இந்நிலையில் அவரது தாயார் அம்பிகா (வயது 82) வீட்டில் தனியாக இருக்கும்போது, நேற்று காலை 11 மணியளவில் டிப்டாப் லேடி ஒருவர் வாடகைக்கு வீடு பார்ப்பது போல் வந்துள்ளார். வீட்டை பார்த்துவிட்டு வீடு பிடித்து இருப்பதாக பாட்டியிடம் கூறி, அவரின் குடும்பத்தை பற்றி நீண்ட நேரம் விசாரித்துள்ளார்.
பாட்டியும், அன்பாக பேசும் டிப்டாப் லேடியை நம்பி, வீட்டில் இருந்த முறுக்கு தண்ணீர் எல்லாம் கொடுத்து உபசரித்து உள்ளார். பின்னரும் நீண்ட நேரமாகியும் டிப்டாப் லேடி வீட்டை விட்டு கிளம்பாமல், தனது கணவரிடம் அட்வான்ஸ் பணம் எடுத்து வரச்சொல்லி இருப்பதாகவும், அவர் வந்து கொண்டிருப்பதாகவும் கூறி வீட்டை நோட்டமிட்டுள்ளார். மதியம் வரை அந்த டிப்டாப் லேடி அங்கிருக்க, அவரது மகன் ரவிக்குமார் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார்.
அவரிடமும் வீட்டை பற்றி விசாரித்த அந்த பெண், பின்னர் அங்கிருந்து கிளம்பி உள்ளார். இதையடுத்து மீண்டும் அந்த டிப்டாப் பெண் மாலை 4 மணிக்கு மீண்டும் பாட்டி தனியாக இருந்தபோது வந்துள்ளார். மறுபடியும் அவர் நீண்ட நேரம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி, வீட்டிலிருந்து செல்லுமாறும், நாளை வருமாறும் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வெளியே இருந்த பெட்டிகடையில் மிளகாய் பொடியை எடுத்து வந்து, வீட்டில் தனியாக இருந்த பாட்டியின் முகத்தில் வீசிய அப்பெண், பாட்டியின் கழுத்தில் இருந்த 10 சவரன் நகையை பறிக்க முயன்றுள்ளார். முகத்தில் மிளகாய் பொடியை விசினாலும், தைரியமாக இருந்த பாட்டி தனது தங்க சங்ககிலியை இறுக்கி பற்றி கொண்டு அலறி சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த டிப்டாப் லேடியால் நகை பறிக்க முடியாமல் திணறிய நிலையில், பாட்டியின் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கதினர் பாட்டியின் வீட்டிற்கு ஓடி வந்தனர். அவர்கள் வருவதை கண்டு அப்பெண் கண் இமைக்கும் நேரத்தில் ஓடிச்சென்றார்.
பின்னர் அக்கம்பத்தினர் பாட்டியின் மகனுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். இது குறித்து பாட்டியின் மகன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அந்த டிப்டாப் லேடியை தேடி வருகின்றனர்.