மயிலாடுதுறையில் குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியை திருமணநாளில் கத்தியால் குத்தி கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை அக்பர் காலனி தெருவைச் சேர்ந்தவர்கள் அருள் (எ) ராயப்பன்( 49), ரேவதி (45) தம்பதியினர். 25 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். இந்நிலையில், பேருந்துநிலைய பகுதியில் சில்லரை வியாபாரம் செய்யும் ராயப்பன் குடிபோதைக்கு அடிமையானவர். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், குடும்பத்திற்கு உதவாத கணவன் ராயப்பனை நம்பாமல் அவரது மனைவி ரேவதி வேலைக்குச் சென்று பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார். இதையடுத்து அவரது மகன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். மகள் பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதால் ரேவதி, கடந்த 1 வருடமாக கணவனை பிரிந்து கூறைநாடு விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தாய் மல்லிகா வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ராயப்பன் ரேவதியின் திருமண நாளான நேற்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்ற ரேவதியை தன்னுடன் வந்து குடும்பம் நடத்த ராயப்பன் அழைத்துள்ளார். அப்போது அவர் அழைப்பை ஏற்கமறுத்த ரேவதி தன்னுடைய உடைமைகளை தரும்படி கேட்டுள்ளார்.
இதையடுத்து உடைமைகளை தருவதாகக் கூறி அழைத்துச் சென்றபோது ராயப்பன் வீட்டிற்கு அருகே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராயப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் ராயப்பனை கைது செய்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.