வேறு மாவட்டத்தில் முகூர்த்தம்.. காதல் மனைவியை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்த கணவன் கைது!

கல்லூரியில் ஒன்றாக படித்ததோழியை 7 வருடமாக காதலித்து கை பிடித்த காதல் கணவன், தன்னுடைய காதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தபோது போலீஸாரிடம் சிக்கி சிறை சென்ற சம்பவம் பெரம்பலூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் கைது
கணவன் கைதுPT
Published on

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள மேலகல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ், 25 வயதுடைய BE பட்டதாரியான இவர் 7 வருடங்களுக்கு முன் கழுதூரில் தனியார் கல்லூரி ஒன்றில் சேர்ந்து கல்விபயின்று வந்துள்ளார். அப்போது அவருடன் ஒன்றாக படித்த கழுதூரை சேர்ந்த கார்த்திகா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு 7ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் சென்று நண்பர்கள் முன்னிலையில் பதிவு திருமணம் செய்துள்ளனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

அதன் பின் வெளிநாடு சென்ற விக்னேஷ் தற்போது வீடு திரும்பிய நிலையில் விக்னேஷின் பெற்றோர்கள் அவருக்கு தங்கள் சமூகத்தை சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் ஒகையூர் கிராமத்தை சேர்ந்த சினேகா என்ற பெண்ணை திருமணம் பேசியுள்ளனர். இந்நிலையில் உள்ளுரில் திருமணம் நடைபெற்றால் முதல் மனைவிக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து விக்னேஷின் குடும்பத்தார், மகன் திருமணத்தை அருகிலுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில நடத்த முடிவு செய்துள்ளனர்.

வெளி மாவட்டத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு!

இதையடுத்து திருமண பத்திரிக்கை ஒன்று அச்சிட்டு அந்த பத்திரிகையை ஆவனமாக இணைத்து பெரம்பலூர் அருகேயுள்ள வாலிகண்டாபுரம் வாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்திடம் கொடுத்து கோயிலில் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று காலை 4 to 6 முகூர்த்த நேரத்தில் விக்னேஷ் - சினேகா திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து விக்னேஷ் சினேகா தம்பதி குடும்பத்துடன் அருகே எறையூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்கள் உறவினர்களை வரவழைத்து விருந்து வைத்துள்ளனர்.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இதனிடையே விக்னேஷின் திருமணம் அவரது முதல் மனைவி கார்த்திகாவுக்கு தெரிந்து தனது உறவினர்களுடன் திருமண மண்டபத்திற்கு வந்து பெண் வீட்டாரிடம் உண்மையை தெரிவித்துள்ளார். உண்மையறிந்த சினேகா தன்னை ஏமாற்றிதிருமணம் செய்தகணவன் விக்னேஷ் மீது அருகிலுள்ள மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

ஏமாற்றி திருமணம் செய்த வழக்கில் கைது!

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்த விக்னேஷ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை காவல்நிலையம் அழைத்து வந்து, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலெட்சுமி விசாரணை மேற்கொண்டார். விக்னேஷ், அவரது தந்தை ராசு, தாயார் நித்தியா மற்றும் சகோதரி ரஞ்சிதா, அவரது கணவர் ராமு ஆகிய ஐந்துபேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

பெரம்பலூர்
பெரம்பலூர்

இதையடுத்து மங்களமேடு போலீஸார் அவர்கள் ஐவரையும் நேற்றிரவு குன்னத்திலுள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி கவிதா விக்னேஷின் குடும்பத்தார் நால்வரையும் நீதிமன்ற ஜாமீனில் விடுவித்துவிட்டு, விக்னேஷை மட்டும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து விக்னேஷை போலீஸார் பெரம்பலூர் கிளைச்சிறைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com