ராணுவ பைக்கை குறைந்த விலைக்கு தருவதாகக் கூறி ஒரு கும்பல் மோசடி செய்து வருவதாக திருநெல்வேலி துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சீனாவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியானது. இதனிடையே, மத்திய அமைச்சரும் முன்னாள் ராணுவ தலைமை ஜெனரலுமான விகே சிங், “சீனா தங்கள் உயிரிழப்புகளை மறைக்கிறது” எனத் தெரிவித்திருந்தார். “எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கல்வானில் துணிச்சல் மிக்க வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் வீணாக விடமாட்டோம். ஆயுதப்படைகள் எல்லா நேரங்களிலும் தயாராகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்” என இந்திய விமானப்படைத் தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா கூறியிருந்தார்.
ஆகவே, எல்லையில் ஒரு பதற்றமான சூழநிலை உருவாகி இருப்பதாக பலரும் கூறிவருகின்றனர். இந்தப் பதற்றத்தை பயன்படுத்தி சில மோசடிகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக சென்னை கொரட்டூரைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்பவர், இந்திய கப்பற்படையில் மூத்த பொறியாளர் ஒருவரிடம், ராணுவ அதிகாரி எனக் கூறி மோசடி செய்தது தெரியவந்தது. அவரிடம் பணத்தை பறித்தவர் தன்னை ராணுவ வீரர் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த மோசடி நடந்த தினத்தில் அவர்கள் ரூ.8 லட்சம் வரை ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டிப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் ஒரு கும்பல் இந்த எல்லை பிரச்னையை வைத்து மோசடியில் ஈடுபட்டுவருவதாக திருநெல்வேலி காவல்துறை துணை கமிஷனர் அர்ஜூன் சரவணன் ஒரு பதிவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “உஷார்! மோசடியில் இது புதுசு. குறைந்தவிலை ராணுவ பைக் மோசடி. எல்லை பிரச்னையை கூறி உடனே அங்கு செல்வதால் புதிய பைக்கை பாதி விலைக்கு தருவதாக ஆன்லைன் விளம்பரம் செய்து முன்பணம் வாங்கி ஒரு கும்பல் ஏமாற்றுகிறது. அவர்கள் பொதுமக்களை தொடர்பு கொள்ள ஆரம்பித்துள்ளனர். ஆகவே கவனம் தேவை” எனக் கூறியுள்ளார்.