ஆவடி அருகே பழுது நீக்க கொடுத்த காரை விற்ற மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடியையடுத்த திருநின்றவூர் கோமதிபுரம் 3வது பிரதான சாலையை சேர்ந்தவர் 23 வயதாகும் பரத்குமார். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது காரை பழுது நீக்க, அதேபகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் விட்டுள்ளார். கடையின் உரிமையாளரான அஜய் அம்புரோஸ் (வயது 32), ஒரு வாரம் கழித்து வந்து காரை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். இதன் பிறகு, பரத்குமார் ஒரு வாரம் கழித்து மீண்டும் மெக்கானிக் செட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கடை பூட்டப்பட்டு இருந்தது. காரையும், மெக்கானிக் அஜய் அம்புரோஸையும் காணவில்லை.
இதனை அடுத்து, பரத்குமார் கைபேசி மூலமாக அஜய் அம்புரோஸை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது, அவர் காரை தந்து விடுவதாக பரத்குமாரிடம் கூறி உள்ளார். ஆனால், பல நாட்கள் ஆகியும் அஜய் அம்புரோஸ் காரை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து பரத்குமார் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அஜய் அம்புரோஸை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த அஜய் அம்புரோஸை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். விசாரணையில் அவர் காரை பழைய இரும்புக் கடையில் விற்று விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீஸார் அஜய் அம்புரோஸை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.