”மாயா கேங்” - சின்னஞ் சிறிய வயதில் கையில் துப்பாக்கி.. ரத்தக்கறை.. டெல்லியை உலுக்கிய கொலைச் சம்பவம்!

தனது இன்ஸ்டா பக்கத்திற்கு "மாயா கும்பல்" என்று தலைப்பிட்டு அதில் பல ரீல்ஸ்களை பதிவிட்டுள்ளார். அதில் பல வீடியோக்களில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துள்ளார்.
youngster who involved murder case
youngster who involved murder casept web
Published on

18 வயதே ஆன இளைஞர் ஒருவர் டெல்லியில் செய்திருக்கும் கொலைச் சம்பவம் நாடுமுழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த இளைஞரின் பின்னணி பல கேள்விகளை நாட்டின் முன் வைத்திருக்கிறது.

பரபரப்பை எகிறவைத்த கொலைச் சம்பவம்

இந்தியாவின் தலைநகரமான டெல்லி உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்பதற்கு மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. G-20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் ஒரு கொலை சம்பவம் அந்த நகரையே அதிரச்செய்துள்ளது. திரைப்படங்களில் காத்திருக்கும் ட்விஸ்ட்டை போல இந்த கொலை சம்பவத்திலும் காவல்துறையினருக்கு எதிர்பாராத ட்விஸ்ட் நேர்ந்துள்ளது. என்ன நடந்தது என்பதை இனி விரிவாக பார்க்கலாம்.

கொலையில் முடிந்த சிறிய வாக்குவாதம்

அமேசானில் மூத்த மேலாளராக பணிபுரிந்து வந்தவர் ஹர்பிரீத் கில் (36). அவரது உறவினர் கோவிங் சிங் (32). இருவரும் சம்பவம் நடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் டெல்லியின் சுபாஷ் விஹார் பகுதியில், குறுகலான சந்து ஒன்றில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அதே சந்தில் எதிர்புறத்திலிருந்து இளைஞர்கள் சிலர் தங்களது இரு இருசக்கர வாகனத்தில் வந்தனர். அந்த பாதையில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். எதிர்முனையில் ஒருவர் வந்துவிட்டால் மறுமுனையில் வருபவர்கள் திரும்பி செல்ல வேண்டும்.

இத்தகைய சூழலில்தான் முதலில் யார் பாதையை கடந்து செல்வது என்பதில் இளைஞர்களுக்கும், ஹர்பிரீத் கில், கோவிங் சிங் ஆகியோருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. வாக்குவாதத்தின் இடையே இளைஞர்கள் தரப்பில் இருந்து ஒருவர், தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியைக் கொண்டு எதிர்புறம் வந்த இருவரையும் சுட்டுவிட்டார். இதில் ஹைபிரீத் கில் இறந்துவிட்டார். கோவிங்சிங் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த போலீசாருக்கு பல திடுக்கிடும் சம்பவங்கள் தெரியவந்துள்ளது.

அன்று நடந்தது என்ன?

இளைஞர்களுக்கும், கோவிங் சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சமயத்தில் கோவிங் சிங்கை இளைஞர்களில் ஒருவர் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ந்த ஜர்பிரீத் கில், இளைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த நினைத்து, தனது இரு சக்கரவாகனத்திலிருந்து கீழே இறங்கியுள்ளார். அச்சமயம் இளைஞர்களின் கூட்டத்தில் இருந்த சமீர் என்பவன் தனது கைத்துப்பாக்கியால் இருவர் தலையிலும் சுட்டுள்ளான். பின் அங்கிருந்து அந்த கும்பல் ஓட்டம் பிடித்துள்ளது.

விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட பிலால்கனி மற்றும் அவரது நான்கு நண்பர்களில் ஒருவரை தவிர மற்றவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் குற்றம் சாட்டப்பட்ட 18 வயதான சமீர் என்பவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘மாயாபாய் கேங்’ என்று பெயரிட்டு தன்னை கேங்லீடராக அறிமுகப்படுத்திக் கொண்டதுடன், " (நாம் பத்னாம், பட கப்ரிஸ்தான், உம்ரா ஜீனே கி, ஷௌக் மர்னே கா -- )என்று இந்தியில் ஸ்டேடஸ் வைத்துள்ளான். அதாவது, "நான் பிரபலமற்றவன், கல்லறை எனது முகவரி, இது எனது வாழக்கூடிய வயது, ஆனால் நான் இறக்க விரும்புகிறேன்" என்பதுதான் அந்த வாசகத்தின் அர்த்தம். இவரது இன்ஸ்டா ஐடியை 2,000க்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்கின்றனர்.

ஏற்கனவே 4 கொலை வழக்குகளில் தொடர்பு

தற்பொழுது,18 வயதை எட்டிய ’மாயா’என்ற சமீர், 18 வயதிற்கு முன்பே நான்கு கொலைகளில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இவருடைய கூட்டாளியான பிலால்கனி கடந்த ஆண்டு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்தவர். அதிலிருந்து எப்படியோ வெளியே வந்து ஒரு வெல்டிங் கடையில் வேலை செய்து கொண்டு சமீருடனான நட்பில் இருந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மற்ற கூட்டாளிகளான சோஹைல் மற்றும் ஜூபைர் ஆகியோர் பஞ்சாப்பிற்கு தப்பிச் செல்ல முயன்ற பொழுது தில்லியில் புராரி அருகே கைது செய்யப்பட்டனர். மற்றொரு குற்றவாளியான அட்னான்னை போலீசார் தேடி வருகின்றனர்.

துப்பாக்கியுடன் ரீல்ஸ்..!

முகமது சமீர் என்கிற மாயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்​​, ரீல்ஸ்களையும் பதிவிட்டு வந்துள்ளார். நீளமான முடியுடன் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் அவர் பதிவிட்ட ரீல்ஸ்களில் இருக்கிறது. மேலும், "சிறை" என்று தலைப்பிடப்பட்ட ஒரு ரீலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், பல இளைஞர்களை சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் நின்றுக் கொண்டிருப்பதைப் போலவும், மாயா என்ற சமீர் துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்து சுடுவதைபோல் உள்ளது.

இந்த பக்கத்திற்கு "மாயா கும்பல்" என்று தலைப்பிட்டு அதில் பத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சினிமா ஈர்ப்பில் கேங்ஸ்டர் ஆனேன் - மாயா அமீர்

மேலும் மாயா பாய் கேங் உருவாவதற்கு காரணம் ‘ஷுட் அவுட் லோக்கன்ட்வாலா’ என்ற படம் தான் என்றும் இப்படத்தால் கவரப்பட்டு துப்பாக்கியை கையில் எடுத்ததாக சமீர் என்ற மாயா தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவு செய்துள்ளார். (அத்திரைப்படத்தில் நாயகன் விவேக் ஓபராய் ‘மாயா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்). அதேபோல், தன்னுடைய தந்தை உயிரிழந்த பிறகு பிழைப்பிற்காகவும் தனது தங்கையை காப்பாற்றுவதற்காகவும் சிறிய சிறிய குற்றங்களில் ஈடுபட்டுவந்ததாகவும் அவன் கூறியிருக்கிறான்.

அமீர் பற்றிய தகவல்கள் காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சிறுவயதுகளில் இளைஞர்கள் திசைமாறுவது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com