செய்தியாளர்: வி.பி. கண்ணன்
கரூர் தாந்தோன்றிமலை பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ். இவர் மீது பல்வேறு வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் தரப்பினர், முகேஷ் மற்றும் அவருக்கு வேண்டியவர்களை தாக்கியுள்ளனர். இதற்கு பழி வாங்குவதற்காக முகேஷ், திருநெல்வேலியில் இருந்து 7 அரிவாள் மற்றும் கத்திகளை வாங்கி பதுக்கி வைத்திருந்தார்.
இது குறித்த ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் துரித நடவடிக்கை எடுத்தனர். முகேஷ் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து 7 அரிவாள் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், முகேஷ் தரப்பினர் பீகாரில் இருந்து 2 நாட்டு கை துப்பாக்கிகளை வாங்கி வந்து, நாமக்கல்லைச் சேர்ந்த ரஜ்சித் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த யுவராஜ் ஆகியோரிடம் விற்றுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ரஜ்சித் மற்றும் யுவராஜை கைது செய்து அவர்களிடமிருந்து 2 நாட்டு கை துப்பாக்கிகளையம் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து 2 பெண்கள் மற்றும் 7 ஆண்களை என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு போலீசாரின் ரகசிய தகவலால் மிகப்பெரிய கொலைத் திட்டம் தவிர்க்கப்பட்டதாக கரூர் மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.