செய்தியாளர்: ராஜன்
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து சோதனை செய்ய காவல்துறைக்கு தமிழக டிஜிபி உத்தரவிட்டார்.
அப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தனிப்படை போலீசார் போதைப் பொருட்கள் நடமாட்டம் மற்றும் கள்ளச்சாராய நடமாட்டம் உள்ளதா என மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.
இதில், தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து இனிகோ நகர் பகுதியில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இனிகோ நகரை சேர்ந்த நிர்மல் ராஜ் மற்றும் அவரது மனைவி சிவானி ஆகியோரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து சுமார் எட்டு கிலோ எடையுள்ள ஐஸ் கிரிஸ்டல் மெத்தபேட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதன் இந்திய மதிப்பு ரூபாய் 8 கோடி அளவுக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படும் எனவும், இந்த போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு 24 கோடி ரூபாய் இருக்கும் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக நிர்மல்ராஜ் மற்றும் அவரது மனைவி ஷிவானி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.