காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் சங்கரன் (29). இவருக்கும் ஏனாத்தூர் புது நகரைச் சேர்ந்த காவலர் ஆரோக்கிய அருண் என்பவருக்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காவலர் ஆரோக்கிய அருண், தங்களின் மூத்த சகோதரர் சகாய பாரத், இளைய சகோதரர் இருதயராஜ், கசாய பாரத் மனைவி சௌமியா, இருதயராஜ் மனைவி ஜெயஸ்ரீ, தன்னுடைய மனைவி மகாலட்சுமி மற்றும் பெற்றோர்கள் என ஒவ்வொரும் வெவ்வேறு தொழில் செய்து வருகிறோம். அதில் தன் மனைவி மகாலட்சுமி ஸ்கிராப் தொழில் செய்து அதிக லாபம் சம்பாதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஸ்கிராப் தொழிலில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் பார்க்கலாம் என சங்கரனை மூளைச்சலவை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சங்கரன், 10 தவணைகளில் ரூ.3 கோடியே 10 லட்சம் ரூபாயை ஆரோக்கிய அருணிடம் கொடுத்துள்ளார். ஆனால், ஆரோக்கிய அருண் பேசியபடி பணத்தை திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதேபோல் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவரிடம் டிரீம் 11 என்ற ஆன்லைன் சூதாட்டத்தில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாயும், ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல் பிரிவில் பணிபுரியும் யுவராஜ் என்பவரிடம் இருந்து ரூ.5 கோடியே 5 லட்சமும், காவலர் மனோகர் என்பவரிடம் இருந்து 11 கோடியே 5 லட்சமும். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் இருந்து ரூ.2 கோடியே 5 லட்சம் என சுமார் ரூ.22 கோடிக்கும் மேல் பலரிடம் இருந்து பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சங்கரன் அளித்த புகாரின் பேரில், டிஎஸ்பி சுரேஷ்குமார், இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாணையில் இதேபோன்று பலரிடம் பணமோசடியில் ஆரோக்கிய அருண் ஈடுபட்டதும், அதற்கு உறுதுணையாக அவரின் குடும்பத்தினர் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணமோசடியில் ஈடுபட்ட இருதயராஜ், அவரின் மனைவி ஜெயஸ்ரீ, சகாய பாரத், அவரின் மனைவி சௌமியா, தாய் மரிய செல்வி ஆகிய 5 பேர் நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர்களை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த ஆரோக்கிய அருண், அவரின் மனைவி மகாலட்சுமி, தந்தை ஜோசப் ஆகியோரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதில் சகோதரர்களான ஆரோக்கிய அருண் காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் துறையிலும் சகாய பாரத் மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்திலும் இருதயராஜ் காவலர் பணியில் இருந்து விலகி பள்ளிக்கல்வித் துறையிலும் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. காவல் துறையில் பணிபுரிபவர்கள் தங்களுடன் பணிபுரியும் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் அதிக வருமானம் சம்பாதிக்கலாம் என்று மூளைச் சலவை செய்து பணமோசடியில் ஈடுபட்டது காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.