செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு குறைந்த 72 ஏரிகளில் உள்ள நீரின் அளவை 2 அடி குறைக்க ஏதுவாக பொதுப்பணித் துறையினர் நீரை வெளியேற்றி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 528 ஏரி உள்ளன. இந்நிலையில் கடந்த வாரத்தில் பெய்த கனமழையால் 75 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மீதமுள்ள ஏரிகள் 75% முதல் 50% வரை நிறைந்துள்ளது.
இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக கனமழை பெய்யும் என்பதால் இந்த ஆண்டு ஏரிகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள 72 ஏரிகள், மழையை எதிர்கொள்ளும் வகையில் தற்போது ஏரியில் உள்ள நீர் இருப்பில் இரண்டு அடி தண்ணீரை நேற்று முதல் உபரி நீர் வெளியேறும் பகுதியின் அருகே புதியதாக அமைக்கப்பட்டுள்ள வெள்ள போக்கி மூலம் வெளியேற்றப்படுகிறது.
அவ்வாறு வெளியேற்றப்படும் நீர் தற்போது ஓடையின் மூலம் கடலுக்குச் செல்கிறது. அதேபோன்று ஏரிகளை கண்காணிக்க ஏரிக்கு ஒருவரை நியமனம் செய்து 72 ஏரிகளையும் பாதுகாத்து வருகின்றனர். தனியார் ஒப்பந்ததாரர் மூலம் ஜேசிபி எந்திரங்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைத்துள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.