ஏப்ரல் 16-ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் கிட்டத்தட்ட 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சத்தீஸ்கரில் உள்ள நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்டங்களின் எல்லையை ஒட்டிய வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. 15 நாட்களில் நக்சலைட்டுகள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும்.
நக்சலைட்டுகளின் கோட்டையாகக் கருதப்படும் அபுஜ்மத் பகுதியில் உள்ள டெக்மேட்டா மற்றும் காகூர் கிராமங்களுக்கு இடையே உள்ள காட்டில், மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) ஆகியவற்றின் கூட்டுக் குழு எதிர்ப்புத் தாக்குதலை நடத்தியபோது, இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அந்தப் பகுதியில் இன்னும் தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த தேர்தலின்போது பாஜக முன்வைத்த மிக முக்கியமான வாக்குறுதியில், இம்மாநிலத்தில் நக்சல் என்ற பிரச்னை முழுமையாக அகற்றப்படும் என்பதாகும். ஆகையால் நக்சலுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக மிக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.