தந்தை பெரியார் பெயரில் புதிதாக திறக்கப்பட்ட உணவகம் மீது தாக்குதல் நடத்தியதாக இந்து அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை பகுதி கண்ணார்பாளையம் என்னுமிடத்தில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை பதிதாக இன்று திறக்க உள்ளார். அதற்கான பணிகளில் நேற்று மாலை தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த கும்பல் ஒன்று தந்தை பெரியார் பெயரில் உணவகம் திறப்பது குறித்து விமர்சித்ததோடு இது குறித்து ஹோட்டல் உரிமையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடையை அடித்து நொறுக்கிள்ளனர். இதையடுத்து கடையின் உரிமையாளர் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசியதோடு கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில், அங்கு பணியில் இருந்த அருண் (21) படுகாயமடைந்தார். இதன் பின்னர் உணவகத்தை சூறையாடிய கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர். பலத்த காயமடைந்த அருண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காரமடை காவல்நிலைய போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ரவிபாரதி, சரவணகுமார், சுனில், விஜயகுமார், பிரபு, பிராபகரன் ஆகிய 6 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..