திருமங்கலம் வி.ஆர். மாலில் அனுமதியின்றி நடைபெற்ற டிஜே பார்ட்டியில் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், போதை பொருட்களை வைத்திருந்த கல்லூரி மாணவி உட்பட 3 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 21-ம் தேதி நள்ளிரவு சென்னை திருமங்கலம் வி.ஆர் மாலில் அனுமதியின்றி டிஜே நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் சென்னை மடிப்பாக்கத்தில் சேர்ந்த ஐடி ஊழியரான பிரவீன் என்ற இளைஞரும் ஒருவர். இவர் நிகழ்ச்சியின்போது, திடீரென மயங்கி விழுந்தார். இதையறிந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், சிகிச்சை பலனின்றி மறுதினமே அவர் மரணமடைந்தார்.
இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அந்த விசாரணை தற்போது அடுத்தகட்டத்துக்கு சென்றுள்ளது. அதன்படி, முறையாக அனுமதி இன்றி நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாக மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக மதுபான பார்-ல், லைசெண்ஸ் இல்லாமல் மது விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. மொத்தம் 6 பேர் இதன்படி கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி சட்டவிரோதமாக டிஜே நிகழ்ச்சி நடத்திய வழக்கில் மேலும் 3 பேரை சில தினங்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கைதானவர்கள் எண்ணிக்கை தற்போது 9 ஆக உயர்ந்துள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள், இளம்பெண்களை முழுவதுமாக போலீசார் அன்றைய தினம் சோதனையிட்டனர். தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தினார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. எனினும் அன்றைய தினம் போலீசாருக்கு எதுவும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால், தொடர்ந்து பார்ட்டியில் கலந்துகொண்ட சந்தேகப்படும்படியான நபர்கள் சிலரை கண்காணித்து வந்துள்ளனர் காவல்துறையினர். அதன்முடிவில் சமூகவலைதளம் மூலம் இவர்கள் போதை பொருட்களை கைமாற்றி பயன்படுத்துவது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது.
அதன்படி சென்னையை சேர்ந்த சட்டகல்லூரி மாணவர் ஸ்ரீகாந்த், கோட்டூர்புரத்தை சேர்ந்த டிப்ளமோ மாணவர் அப்துல் ஹமீத், கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி டாக்கஸ் ஆகிய 3 பேரை நேற்று கைது செய்த போலீசார், அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நட்சத்திர விடுதிகள் தனியார் மால்களில் நடைபெறும் பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் இவர்கள் பார்ட்டியில் சந்தித்து பழக்கம் ஏற்பட்டு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
குறிப்பாக கைது செய்யப்பட்ட மாணவி டாக்கஸ் என்பவருக்கு எந்த வித போதை பழக்கம் இல்லை என்பதும் ஆனால் போதைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்கிற அடிப்படையில் தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் போதைப் பொருட்களை வாங்கி கைமாற்றி விற்றுவிட்டு வந்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் மாணவி டாக்கசுக்கு மேற்கத்திய இசையில் ஆர்வம் என்பதால் இசைக்கச்சேரிகள் மற்றும் பார்ட்டிகளுக்கு அதிகம் செல்வதையும் அதன்மூலம் கிடைத்த நண்பர்கள் பழக்கத்தால் தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் ஸ்டாப் வடிவிலான போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. பார்டிகளில் சந்திக்கும் நபர்களை வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் குழுக்கள் மூலமாக ஒருங்கிணைத்து அவர்களுக்குள்ளாகவே போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்ததும் விற்பனை செய்து வந்ததும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த மூன்று பேரிடம் இருந்து 12 ஸ்டாம்ப் வடிவிலான தடைசெய்யப்பட்ட போதைப் பொருளும் கஞ்சாவில் இருந்து எடுக்கப்படும் ஹாசிஸ் என்ற எண்ணெய் வடிவிலான போதைப்பொருள் என சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவலின்படி, ‘தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்கள் மிகவும் குறைவான அளவுதான். இதனை மொத்த விற்பனை செய்பவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இது போன்ற போதைப் பொருட்கள் ஆந்திரா கர்நாடகா போன்ற பகுதியில் இருந்து சென்னைக்கு கொண்டு வருவதை கண்டுபிடித்துள்ளோம். விரைவில் ஏஜென்டுகள் மற்றும் பெரிய அளவிலான போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்படுவார்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிஜே பார்ட்டியில் கலந்து கொண்டு மரணம் அடைந்த பிரவீன் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து முதற்கட்ட மருத்துவ அறிக்கையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் மரணமடைந்த பிரவீன் மதுவுடன் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் ஒன்றை பயன்படுத்தியதால் மரணம் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. மது மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களில் பயன்படுத்தியதால் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான ரத்த அழுத்தத்தால் மயங்கிய நிலையில் மருத்துவமனைக்கு மதிக்கப்பட்ட பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- சுப்பிரமணியன்