சென்னை விமான நிலையத்திற்கு வரும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், இலங்கையை சேர்ந்த 2 நபர்கள் தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், டிஆர்ஐ குழு இன்று (செவ்வாய்) காலை விமான நிலையத்தில் முகாமிட்டதோடு, விமானத்தில் இருந்து பயணிகளை அழைத்து வரும் ஷட்டில் பேருந்தில் ஏறி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3.3 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 5.5 கிலோ தங்கத்தை கைப்பற்றினர். இதையடுத்து இதில் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த மொஹமது அக்ரம் மற்றும் மொஹமது வசீம் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், ஷட்டில் பஸ் டிரைவர் ராஜ்குமார் என்பவரிடம் ரிஃபாயுதீன் என்பவர் தங்கத்தை கொடுத்து விமான நிலையத்தில் இருந்து வெளியில் கொண்டு வந்து ஒப்படைக்கச் சொல்லியிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரிபாயுதீனும் கைது செய்யப்பட்டார்.