கோவையில் பல்வேறு திருட்டு வழக்குகளில் பறிமுதல் செய்த நகைகளை நீதிமன்றம் உத்தரவிட்டும் உரியவரிடம் கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்ட பெண் காவலர் சுஜா கைது செய்யப்பட்டார்.
கோவை சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தவர் ஸ்வப்ண சுஜா. இவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் நீதிமன்றம் தொடர்பான பணியைக் கவனித்து வந்தார். இதில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியையும் சேர்த்து செய்து வந்தார்.
அதன்படி 11 குற்ற வழக்குகளில் தொடர்புடைய 50 சவரன் நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகள் சுஜாவிற்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் நகைகளை நீதிமன்றத்தில் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த ஸ்வப்ண சுஜா, இது குறித்த காவல் நிலைய அதிகாரிகளின் கேள்விகளுக்கு முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்ததோடு, சில உயர் அதிகாரிகளின் பெயர்களை பயன்படுத்தி நழுவி வந்துள்ளார்.
நகைகள் நீண்ட நாட்களாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்த நிலையில், சிங்காநல்லூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் ஸ்வப்ண சுஜாவிடம் விசாரணை மேற்கொண்டார். இதனால் பயந்து போன சுஜா, நீண்ட நாள் விடுப்பு எடுத்துச் சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம் சுஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 50 சவரன் நகைகளை சுஜா மோசடி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்வப்ண சுஜாவை கைது செய்த மாநகர குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.