உரிய ஆவணங்கள் இன்றி திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 5 பேரை திருப்பூர் மாநகர போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகர் மங்கலம் சாலையில் நேற்றிரவு சோதனைச் சாவடியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வடமாநில இளைஞர்களை போன்று சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சோதனை செய்துள்ளனர். இதில், அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. முறைகேடாக திருப்பூர் பெரியாண்டிபாளையம் எஸ்.ஆர்.நகர் பகுதியில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், அவர்கள் அதே பகுதியில் உள்ள சாய ஆலை நிறுவனத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை முறைகேடாக பெற்றதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக சாய ஆலை நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில், வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ், ரஷீத்சேக் (34), முகமத் சோஹித் (26), ரஷிதுல் (28), மிஷன்கான் (28) மற்றும் சுமன் மசூந்தர் (26) ஆகிய 5 பேரை திருப்பூர் மத்திய போலீஸார் கைது செய்தனர்.