செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி, ஹெப்பகோடி, சூர்யா நகர், பரப்பன அக்ரஹாரா மற்றும் வர்தூர் ஆகிய காவல்நிலைய எல்லை பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இந்த தொடர் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடிவந்தனர்.
இந்த நிலையில் மாநில எல்லையான பொம்மசந்திரா பகுதியில் திருட்டு கும்பல் ஒன்று திருட்டு சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டிருந்தது. இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்ற ஹெப்பகோடி காவல்நிலைய போலீசார், திருட்டு சம்பவங்களில் ஈடுபட முயன்ற 5 பேரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் மஞ்சுநாத், எபினேசர், மதன், அஜித் மற்றும் நவீன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த திருட்டு கும்பல் பூட்டியுள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து உள்ளே சென்று தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து திருடி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்கள், 138 கிராம் தங்க நகைகள், 284 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.