போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் தனியார் கல்லூரி அருகே, பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேரை மடக்கி சோதனையிட்டனர். அதில் அவர்களது வாகனத்தில் 3000 வலி நிவாரணி மாத்திரைகள், 30 ஊசிகள், 4 சாலின் வாட்டர் பாட்டில் இருந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், ஆன்லைனில் பணம் கட்டி ஆர்டர் செய்யும் சிலருக்கு, டெல்லியில் இருந்து மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை ஒரு கும்பல் பார்சல் மூலம் அனுப்பி வைப்பதும் - அதை இவர்கள் போதைக்கு பயன்படுத்துவோரிடம் அதிக விலைக்கு விற்று வந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்த வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக இளைஞர்கள் பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவரான கடலூரைச் சேர்ந்த நிவாஸ் (20), அய்யப்பந்தாங்கலைச் சேர்ந்த யோவான் (32), பாஸ்கர் (23), சந்தோஷ்குமார் (28), ஸ்டீபன்குமார் (28) ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.