திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் போலி மதுபானம் தயாரித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே கற்பகநாதர்குளம் கிராமத்தில் போலி மதுபானம் தயார் செய்வதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் முத்துப்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன் தலைமையில் தனிப்படை இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அப்போது கற்பகநாதர்குளம் சந்தானம் இறால் பண்ணை அருகே உள்ள கீற்றுக்கொட்டகையை சோதனை மேற்கொண்டதில் மேற்படி கீற்றுக் கொட்டகைக்குள் தமிழக அரசு மதுபானம் போன்று போலியாக தயாரிக்கப்பட்ட 180 மி.லி. அளவுள்ள 1553 பாட்டில்களும் 5 சாராய கேன்களில் சுமார் 175 லிட்டர் விஷ நொடியுடன் கூடிய கள்ளச் சாராயமும் பெரிய பிளாஸ்டிக் தொட்டியில் சுமார் 105 லிட்டர் கலவையிடப்பட்ட சாராயமும் மற்றும் தளவாடப் பொருள்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
மேலும் போலி மதுபானம் தயாரித்த இடும்பாவனத்தைச் சேர்ந்த மகேஷ், கார்த்திக், கற்பகநாதர்குளத்தை சேர்ந்த சந்தானம், ஓட்டூரைச் சேர்ந்த செல்வா என்கிற செல்வத்துரை, காரைக்காலைச் சேர்ந்த ஜெயபால் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் திருத்துறைப்பூண்டி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.